Please Click the link & get 2000 Rs instantly

Tuesday, 21 March 2017

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்


     மூலவர்
:                             
சுப்பிரமணிய சுவாமி


உற்சவர்
சண்முகர்

அம்மன்/தாயார்
தெய்வானை

தல விருட்சம்
கல்லத்தி

தீர்த்தம்
லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள்

ஆகமம்/பூஜை
காமிகம், காரணம்

பழமை
1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்
தென்பரங்குன்றம்

ஊர்
திருப்பரங்குன்றம்

மாவட்டம்

மாநிலம்
தமிழ்நாடு


பாடியவர்கள்:




நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்.

திருப்புகழ்

வினைத்த லந்தனி லலகைகள் குதிகொளவிழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுணவிரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் புரிவேலா -

மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய  கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை யுடையோனே;

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே -

தெனத்தெனந்தன எனவரி யளிநறைதெவிட்ட அன்பொடு பருகுயபொழில்திகழ் திருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

-
அருணகிரிநாதர்




 திருவிழா:




வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.




 தல சிறப்பு:




முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது முதல்படைவீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்.




திறக்கும் நேரம்:




காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.




முகவரி:




அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் - 625 005 மதுரை மாவட்டம்.




போன்:




+91- 452- 248 2248, 248 2648, 98653- 70393, 98421- 93244, 94433 - 82946.




 பொது தகவல்:




இத்தலவிநாயகர் கற்பக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது. அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறாள். கொடிமரத்தின் அருகே மலையை நோக்கி, அதன் அளவிற்கேற்ப பெரியநந்தி இருக்கிறது. இதற்கு அருகிலேயே மூஞ்சூறு, மயில் வாகனங்களும் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், தன் மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். மகாமண்டபத்தில் நடராஜர், சுற்றிலும் ரிஷிகளுடன் பார்வதியின் அம்சத்தில் அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது. அருகில் கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர். இக்கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.

தென்பரங்குன்றம் : ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே "திருப்பிய பரங்குன்றம்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்' என்று மருவியது. அருணகிரியார் திருப்புகழில், ""தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே'' என்று பாடியிருக்கிறார். இந்தக் கோயிலில் சிவன், நின்றகோலத்தில் கிழக்கு திசை நோக்கியுள்ளார். இவருக்கு பின்புறத்தில் நந்தி நின்ற நிலையில் உள்ளது. அம்பிகை இல்லை. அருகில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தெற்கு திசை நோக்கி நின்றிருக்கிறார். ஆனால், மயில் வாகனம் இல்லை. அவருக்கு வலப்புறத்தில் நடராஜர் அருள்புரிகிறார். இவரது வலது மேற்பகுதியில் பஞ்சமுக விநாயகர், இடது மேற்புறம் முருகன் இருவரும் இருக்கின்றனர். பஞ்சமுக விநாயகரைச் சுற்றிலும் மேலும் எட்டு விநாயகர்கள் இருக்கின்றனர். எண்திசைகளை குறிக்கும்விதமாக இந்த விநாயகர்கள் இருப்பதாக சொல்கின்றனர். இக்கோயில் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சிவாலயங்களில் விநாயகர், முருகன், துர்க்கை, பெருமாள் ஆகியோர் பிரகார தெய்வங்களாகவே இருப்பர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியே அருளுகின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.





பிரார்த்தனை




திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.







நேர்த்திக்கடன்:




இக்கோயிலில் அதிகளவில் அன்னதானம் செய்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.




 தலபெருமை:




திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.

புரட்டாசியில் வேலுக்கு அபிஷேகம்: திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.இக்கோயிலில் உள்ள தங்க ரதத்தை பக்தர்கள் முன்பதிவு செய்து இழுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நக்கீரர் சன்னதி :சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால் அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவவழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது. நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களை காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார். அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். அப்போது நக்கீரர் முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்றார். முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச்செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார். வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது. இதற்கு அருகில் மேற்கு நோக்கிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும், எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீரர் இருக்கிறார். தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு லிங்கங்களும், ஒரு சிவ வடிவமும், காசிவிஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிகை, பைரவர், கற்பகவிநாயகர் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நக்கீரர் அடைக்கப்பட்ட பஞ்சாட்சர குகை சரவணப்பொய்கை அருகில் இருக்கிறது.

நவ வீரர்கள்: சிவபெருமான் முருகனைப் பெற்றெடுத்த போது, வெப்பம் தாளாமல் பார்வதிதேவி ஓடினாள். அப்போது, அவளது கால் சிலம்பு தெறித்து நவரத்தினங்களும் கீழே கொட்டின. அவை நவசக்திகளாக உருவெடுத்தன. இவர்களை "நவகாளிகள்' என்பர். இந்த தேவியர், சிவனை விரும்பி கர்ப்பமாயினர். இதையறிந்த பார்வதிதேவி, அந்தப் பெண்களை கர்ப்பத்துடனேயே வாழும்படி சாபமிட்டாள். குழந்தை பெற இயலாத காளிகள், சிவனிடம் முறையிட, அவர் பார்வதியை சமாதானம் செய்து, உலக நன்மை கருதியும், முருகனுக்கு துணையாகவும், அக்குழந்தைகள் பிறக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். பார்வதியும் மனமிரங்கி, ஒன்பது குழந்தைகளைப் பிறக்கச் செய்தாள். அவர்கள் முருகனுக்கு துணையாக இருந்து சூரபத்மனை அழிக்க உதவினர். வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேஸ்வரன், வீரராட்சஷன், வீரமார்த்தாண்டன், வீராந்தகன், வீரதீரன், வீரசூரன் என்பது அவர்களின் பெயர். இவர்களுக்கு கோயிலின் முன்மண்டபத்தில் தனிசன்னதி உள்ளது.

முருகன் அருகில் கருடாழ்வார் : சிவன் கோயில்களில் நந்தி, விநாயகர் தலங்களில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.

வெள்ளை மயில் : மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், திருப்பரங்குன்றம் கோயிலில், வெள்ளை நிற மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் வசிப்பதாக ஐதீகம்.

தெட்சிணாமூர்த்திக்கு ருத்ராபிஷேகம்: இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருக்கிறார். ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள், நீண்டநாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவரது சன்னதி முன்பாக "ருத்ராபிஷேகம்' செய்து வழிபடுகின்றனர். இதற்காக ஒரு "வெள்ளிக்குடத்தில்' சுவாமியை ஆவாகனம் (சுவாமியை குடத்தில் எழுந்தருள வைத்து) செய்து 11 வேத விற்பன்னர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களாகிய ருத்ரம், சமஹம் ஆகிய மந்திரங்கள் சொல்லி வழிபடுகின்றனர். இது விசேஷ பலன்களைத் தரக்கூடிய அபிஷேகம் ஆகும்.

தேவி லிங்கம்: சிவன், பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தபோது, அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தாராம். அம்மந்திரத்தை குருவிடம் இருந்து முறையாக கற்காமல், மறைமுகமாக கேட்டது தவறு என எண்ணிய முருகன், இத்தலத்தில் சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று சிவன் காட்சி தந்தார். இந்த சிவன், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றம் செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவரே இங்கு பிரதான மூர்த்தி ஆவார். ஆனால், அறுபடை முருக தலங்களில் இத்தலமும் ஒன்று என்பதால் பிற்காலத்தில் முருகன் பெயராலேயே இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. விழாக்காலங்களில் சிவனுக்கே கொடியேற்றப்படுகிறது. ஆனால், முருகனே வீதியுலா செல்கிறார். முருகன் சிவனது அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். எனவே, இங்குள்ள முருகனுக்கு "சோமசுப்பிரமணியர்' என்ற பெயரும் உள்ளது. சோமன் என்பது சிவனைக் குறிக்கும். கருவறையில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவன், பார்வதி மற்றும் முருகனுடன் "சோமாஸ்கந்தராக' இருக்கிறார். இது விசேஷமான அமைப்பாகும். துர்க்கை அம்மனுக்கு சிவன், விமோசனம் தந்தபோது சோமாஸ்கந்தராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. சிவலிங்கம் துர்க்கை அம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால், "தேவி லிங்கம்' என்கின்றனர். சுவாமி, "சாந்தகாரம்' எனும் மருந்து பூசப்பட்டவர் என்பதால் சாம்பிராணி தைலம் மட்டும் பூசி வழிபடுகின்றனர். வேதவியாசர், பராசர முனிவர் ஆகியோர் சுவாமியை வழிபட்டுள்ளனர்.

மால்விடை கோயில்: இக்கோயிலில் ஒரே குடவறையில் சிவன், பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர் மற்றும் துர்க்கை ஆகிய ஐந்து பேரும் அருள்கின்றனர். துர்க்கையம்மன் ராஜகோபுரத்திற்கு நேரே வடக்கு பார்த்து, காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் நின்றகோலத்தில் இருக்கிறாள். இவளுக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். துர்க்கைக்கு வலது புறம் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் சுப்பிரமணியர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவருக்கு அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.

சிவன் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே மகாவிஷ்ணு, பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் மதங்க மகரிஷியும் இருக்கிறார். பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும். எனவே இக்கோயிலை "மால்விடை கோயில்' (மால் - திருமால், விடை - நந்தி) என்கின்றனர். பெருமாள் தன் மைத்துனராகிய சிவனுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின்போது, இவரே பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கச் செல்கிறார்.

சத்தியகிரீஸ்வரர்: மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி துர்க்கையம்மன் இங்கு வந்து லிங்க வடிவ மலையாக இருக்கும் சிவனை தவம் செய்து வணங்கினாள். மேலும் மலையிலேயே ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தோஷத்தை போக்கியருளினார்.

பரம்பொருளாகிய சிவன் குன்று வடிவில் அருளுவதால் சுவாமி, "பரங்குன்றநாதர்' என்றும், தலம் "பரங்குன்றம்' என்றும் அழைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் சிவன் கோயிலாகவே இருந்துள்ளது. இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை "சத்தியகிரீஸ்வரர்' என்று அழைக்கின்றனர். முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. இத்தலத்தில் சிவன், மலை வடிவில் அருளுகிறார். பரம்பொருளாகிய சிவன், குன்று வடிவில் அருள் செய்வதால் சிவனுக்கு "பரங்குன்றநாதர்' என்றும், தலம் "திருப்பரங்குன்றம்' என்றும் பெயர் பெற்றது. இவரை வேத வியாசர், பராசரர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். ஆனி பவுர்ணமியில் சிவனுக்கு முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடப்பது விசேஷம்.

மனைவியுடன் நந்திகேஸ்வரர்: திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். அருகில் இரட்டை விநாயகர்கள் இருக்கின்றனர்.

பிரகாரம் இல்லாத சிவதலம் : பொதுவாக கோயில்களில் சுவாமியைச் சுற்றி பிரகாரங்களும், பரிவார தேவதைகளும் இருக்கும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். பிள்ளையார்பட்டி குடவறைக்கோயில் என்றாலும், அங்குள்ள சிவன் சன்னதியை சுற்றிவரலாம்.

தவறுக்கு பரிகாரம் : கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார். பிரணவ மந்திரத்தை குரு மூலமாக கற்பதுதான் முறை. தற்செயலாக முருகன் மந்திர உபதேசம் கேட்டுவிட்டாலும் அதை தவறாகவே கருதி பரிகாரத்திற்காகவும், சிவனே தனக்கு குருவாக இருந்து மந்திரம் உபதேசிக்க வேண்டுமென்றும் வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று காட்சி தந்து மன்னித்தார். இவர், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றத்திற்கு செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

தந்தைக்கு பதில் மகன் : திருப்பரங்குன்றம் கோயிலில் விழாக்களின்போது, சிவனுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், முருகன் வீதியுலா செல்கிறார். முருகன், சிவ அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். இங்கு முருகனுக்கு "சோமசுப்பிரமணியர்' என்ற பெயரும் உள்ளது. சோமன் என்பது சிவனின் ஒரு பெயர்.

கொடிமரம், ராஜகோபுரத்துடன் துர்க்கை சன்னதி
கோயில்களில் துர்க்கை, பரிவார தெய்வமாகவே இருப்பாள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். ஆம்! இவளது சன்னதி எதிரிலேயே கொடிரம், கோபுரம் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்த பின்பு, துர்க்கை இங்கு சிவனை வழிபட்டதோடு, ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து மனம் அமைதியடைந்தாள். சிவனும் இங்கேயே அவளை தங்கும்படி அருள் செய்தார். எனவே, இத்தலத்தில் அவளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

பெரியநந்தி : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் ஆகிய தலங்களில் பெரிய நந்திகள் இருக்கிறது. இத்தலங்களில் சிவனின் அமைப்பிற்கேற்ப நந்தி பெரிதாக அமைக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றத்தில் சிவன், மலை வடிவாக இருப்பதால் இங்குள்ள நந்தியும் மலைக்கேற்ப சற்று பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், காலகண்டியுடன் இருக்கிறார். அருகில் இரட்டை விநாயகர்கள் இருக்கின்றனர்.

கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.




  தல வரலாறு:




தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இந்த நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது. சூரனை வெற்றி கொண்ட முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானை திருமணம் செய்து தர சம்மதித்தார். அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் வந்தனர். நாரதர் முன்னிலையில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. இதேகோலத்தில் சுவாமி இங்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது.






சிறப்பம்சம்:




அதிசயத்தின் அடிப்படையில்: சிறப்பம்சத்தின் விளக்கம்: இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனி வாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர் 
 இருப்பிடம் :
மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 7 கி.மீ., தூரத்தில் திருப்பரங்குன்றம் உள்ளது.மத்தியபஸ் ஸ்டாண்டில் இருந்து அடிக்கடி பஸ்வசதி உண்டு. 

அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருப்பரங்குன்றம், மதுரை

அருகிலுள்ள விமான நிலையம் :   
மதுரை 

தங்கும் வசதி :
மதுரை   
பாண்டியன் ஹோட்டல் +91 - 452 - 435 6789   
ஹோட்டல் சங்கம் +91 - 452 - 253 7531, 424 4555   
ஹோட்டல் தமிழ்நாடு +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)   
ஹோட்டல் சுப்ரீம் +91 - 452 - 234 3151, 301 2222   
ஹோட்டல் பிரேம்நிவாஸ் +91 - 452 - 234 2532 - 3, 437 8787   
ஹோட்டல் பார்க் பிளாசா +91 - 452 - 301 1111, 234 2112   
ஹோட்டல் நார்த்கேட் +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)   
ஹோட்டல் கீர்த்தி +91 - 452 - 437 7788, 437 8899   
ஹோட்டல் கோல்டன் பார்க் +91 - 452 - 235 0863   
ஹோட்டல் ரத்னா ரெசிடன்சி +91 - 452 - 437 0441 - 2, 437 4444. 

No comments:

Post a Comment