Please Click the link & get 2000 Rs instantly

Saturday, 18 March 2017

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்



 

  1. பாடியவர்கள்:

    அப்பர், சம்பந்தர்
    தேவாரப்பதிகம்

    உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

    -திருஞானசம்பந்தர்
    தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22வது தலம்.
     திருவிழா:
    கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா, மாசி மகா சிவராத்திரி *தை மாதம் மாட்டுப்பொங்கல் திருவூடல் உற்சவம் சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம் *மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். *இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சன்னதி முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. *தினசரி 6 கால பூஜை *மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா) *தை மாதம் 5 ந் தேதி சுவாமி சுற்றுவட்டாரக் கோயில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட் என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார். *தை மாதம் ரதசப்தமி அன்று கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார். *பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் 6 நாட்கள் *வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவது திருவிழா இத்தலத்தில் நடந்த வண்ணமே இருக்கும். *ஒவ்வொரு மாதமும் பிரதோசம் மிகவும் சிறப்பாக நடைபெறும். *தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேச பூஜைகள். ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.
     தல சிறப்பு:
    *லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். *நான் என்ற அகந்தை அழிந்த தலம் *உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் *பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். *அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம் *அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் *எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். *9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம் *தென்னிந்தியாவிலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். *தமிழகத்தின் திருப்பதி என்று போற்றப்படுமளவுக்கு லட்சோபலட்சம் பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சக்தி வாய்ந்த சிவ தலம். *6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. *ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. *சேஷாத்திரி சுவாமிகள், ரமண மக ரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம் கிரிவல சிறப்பு : கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்றுதான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் சுற்றுவது சிறப்பு, முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது. சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார்.இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் கிரிவலம் வரலாம். ஞாயிறு சிவபதவிகள் கிடைக்கும் திங்கள் இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய் கடன் வறுமை நீங்கும், தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம். புதன் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம் வியாழன் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம் வெள்ளி விஷ்ணு பதம் அடையலாம் சனி நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அம்மாவாசை மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும். 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233 வது தேவாரத்தலம் ஆகும்.
    திறக்கும் நேரம்:
காலை 5மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை-606 601. திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:
+91-4175 252 438.
 பொது தகவல்:
அண்ணாமலை பெயர்க் காரணம்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும்.பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

மலை :
 கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடதுபக்கமாகவே செல்லவேண்டும்.நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம்.அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம்.பேசிக்கொண்டு செல்லக்கூடாது. இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒருதரம் பார்த்தல் அவசியம். இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும்., வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட வந்து இந்த கிரிவலம் செய்கின்றனர்.

கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த கோயில் இது. இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு, பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
பிரார்த்தனை
இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பிகள் பிரச்னைகள் என்று அனைத்து தரத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம். மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். குறிப்பாக மன அமைதி வேண்டுவோர் இத்தலத்தல் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.
நேர்த்திக்கடன்:
அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்வோர் தங்கள் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்)எடைக்கு எடை நாணயம்,பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாக தருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்துகிறார்கள்.நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திகடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள். பிரசாதம் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.
 தலபெருமை:
ஒருநாள் மட்டும் தரிசனம்: சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ""ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்'' தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.

அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

பெருமாளும் ஜோதி வடிவில்!: 
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள "வைகுண்ட வாசல்' வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

செந்தூர விநாயகர்: 
ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும்.
இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

நந்திக்கு பெருமை: 
மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

முதல் வணக்கம் முருகனுக்கே!: 
கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர், "கம்பத்திளையனார்' (கம்பம் தூண், இளையனார் முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

ஆணவம் அடக்கும் பைரவர்: இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

நான்கு முகத்துடன் லிங்கம்: பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பாதாள லிங்கம்: மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்' இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர் களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அருணகிரி யோகீசர்: 
அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன், அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணித்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார், கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்து விட்டான். எனவே, வருத்தமடைந்த அருணகிரியாரை, அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தாள். கிளியாக வந்த அருணகிரியார், இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். "கிளி கோபுரம்' என்றே இதற்கு பெயர். அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில், அருணகிரிநாதர், இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை "அருணகிரி யோகேசர்' என்கிறார்கள்.

விநாயகரின் முதல்படைவீடு: 
முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. அருணைநாயகி திருவண்ணாமலையில் வாசம் செய்ய வந்த கதை இது. திருப்புகழ் தந்த அருணகிரிநாதர்மேல் சம்பந்தாண்டான் என்னும் மந்திரவாதி வஞ்சம் கொண்டிருந்தான். ஆறுமுகனின் அருளுக்குப் பாத்திரமான அருணகிரிநாதர், முருக தரிசனம் பெற்று வீடுபேறு அடையக்கூடாதென்பதில் குறியாய் இருந்தான் அவன். 

அவன் வழிபட்டுவந்த காளிதேவிதான் அருணை நாயகி. தன் பக்தனின் வேண்டுதலையேற்று, முருகனைத் தன் மடியிலிருத்தி எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் அன்னை. இதைத் தன் ஞானக்கண்ணால் அறிந்த அருணகிரிநாதர், அன்னையை வசப்படுத்த பாடல்களைப் பாடினார். பாடல்களில் அம்பிகை மெய்ம்மறந்திருக்கையில், மடியிறங்கி வந்த முருகன் அருணகிரிநாதருக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இதனால் கோபமடைந்த சம்பந்தாண்டான் அன்னையை நிந்தித்தான். அதுமுதற்கொண்டு சம்பந்தாண்டனின் வழிபாடுகளை ஏற்காமல் திருவண்ணாமலையிலேயே எழுந்தருளி விட்டாள் அருணைநாயகி. 

திருவண்ணாமலை கொசமடத் தெருவில் அன்னையின் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில் என்றாலும், எழிலுருவுடன் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை நாயகி!

மகாதீபம்:மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக அண்ணாமலைக்கு அரோஹரா எனக்கூறி தரிசனம் கண்டபின் இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோயிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். திருப்புகழ் மண்டபம் கோயிலில் அமைந்துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இக்கோயில் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும். லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

கிளி கோபுரம் (81 அடி உயரம்);
தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்),
தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்),
மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),
வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

கார்த்திகை ஜோதி மகத்துவம்: அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்: திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது மலையை இடதுபுறமாக சுற்றிவா என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் துõரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

மலையளவு பயன்: நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது. கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும். கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும்.

இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும். மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும். பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்! கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.

கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும். பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள துõண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம். அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சி முனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: 
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.
  தல வரலாறு:
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியை க் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்து விட்டார்.ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி)அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார்.பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார்.விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார்.பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள். அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.

பிருங்கி முனிவர் தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள்.

அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும்.இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். 
விஞ்ஞானம் அடிப்படையில்: நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும், மலையிலுள்ள மூலிகை செடிகள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அந்த நாட்களில் மலையை சுற்றி வந்தால் மலையிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம்மீது பட்டு உடலும் உள்ளமும் தூய்மையடைகிறது. மலையைச் சுற்றும் போது கைகளை வீசிக் கொண்டு நடக்காமல் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment