சொத்து ஆவணங்களை பதிவு செய்யும்போது பான் எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும் என்று பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அசையா சொத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்குமேல் இருப்பின், விற்பவர்களும் வாங்குபவர்களும் தங்களின் ஆவணத்தில் நிரந்தர வருமான கணக்கு எண் (பான்) குறிப்பிட வேண்டும். அந்த பான் எண்ணை சரிபார்க்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் எண் இல்லாதவர்கள் படிவம் 60-ஐ கொடுக்க வேண்டும். அதில் விவசாயம் அல்லாத ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக பெறுபவர்கள் பான் விண்ணப்பித்ததற்கான ஒப்புதல் எண்ணை அளிக்க வேண்டும். மேலும், தனி நபர் அல்லாத நிறுவனம், கம்பெனி போன்றவற்றுக்கு பான் எண் மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.இதுவரை பான் எண்ணை அளித்தால் அதற்கான அட்டையை மட்டுமே அலுவலர்கள் சரிபார்க்க முடியும். அதன் உண்மைத் தன்மையை அறிய முடியாது. ஆனால், தற்போதைய ஸ்டார் 2.0 திட்டத்தில், பான் அட்டையின் உண்மைத் தன்மையை இணையதளம் வழியாக சரிபார்க்க வசதி செய்யப் பட்டுள்ளது.
ஸ்டார் 2.0 மென்பொருளில், ஆவணங்களை உருவாக்கும்போதும் பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் ஆவண சுருக்கத்தை பதிவு செய்யும்போதும் பான் எண்ணை பதிவு செய்ததும், அந்த விவரங்கள் என்எஸ்டிஎல் தரவுடன் இணைதள வழியாக நேரடியாக சரி பார்க்கப்படும். அப்போது பான் எண் பொருந்தாவிட்டால், விவரம் மென்பொருள் வழியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அதை சரி செய்து, ஆவணப்பதிவை தொடரலாம்.
எனவே பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களிடம் பான் எண்ணை சரியாக பதிவு செய்ய பதிவு அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். ஒருவேளை பான் எண் வேறு நபருடையது என்பது உறுதி செய்யப்பட்டால், ஆவணம் பதிவு செய்யப்படாமல் சரியான பான் எண்ணை ஆவணத்தில் குறிப்பிடக் கோரி திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment